எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் மற்றும் எல்நினோ போன்ற இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு இந்த ஆண்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் அவர்கள் கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்த முக்கிய இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்குகின்றன. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்கள் உற்பத்திக்கான முக்கிய காலகட்டமாகும். அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி சீசன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டிலும் ஜனவரி மாதம் முதலே உப்பு உற்பத்திப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உற்பத்தி மேலும் வேகமடைந்தது. பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது பெய்யும் லேசான மழை உப்பு உற்பத்தியை பாதிக்கும். இதனால் அந்த காலகட்டத்தில் உப்பின் விலை ஓரளவு அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எல்நினோ உள்ளிட்ட இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு சாதகமான வானிலை நிலவி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றுடன் கடும் வெயிலும் இணைந்து நிலவும் சூழலை உப்பு உற்பத்தியாளர்கள் ‘கோடை’ என குறிப்பிடுகின்றனர். இந்த ஆண்டு கோடை சிறப்பாக அமைந்துள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.