தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் மற்றும் எல்நினோ போன்ற இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு இந்த ஆண்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் அவர்கள் கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்த முக்கிய இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்குகின்றன. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்கள் உற்பத்திக்கான முக்கிய காலகட்டமாகும். அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி சீசன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டிலும் ஜனவரி மாதம் முதலே உப்பு உற்பத்திப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உற்பத்தி மேலும் வேகமடைந்தது. பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது பெய்யும் லேசான மழை உப்பு உற்பத்தியை பாதிக்கும். இதனால் அந்த காலகட்டத்தில் உப்பின் விலை ஓரளவு அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எல்நினோ உள்ளிட்ட இயற்கை மாற்றங்களால் உப்பு உற்பத்திக்கு சாதகமான வானிலை நிலவி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வீசும் மேல்காற்றுடன் கடும் வெயிலும் இணைந்து நிலவும் சூழலை உப்பு உற்பத்தியாளர்கள் ‘கோடை’ என குறிப்பிடுகின்றனர். இந்த ஆண்டு கோடை சிறப்பாக அமைந்துள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உப்பளங்கள் முழுவதும் வெள்ளை நிறத்தில் குவிக்கப்பட்டுள்ள உப்பு, சிறிய குன்றுகளைப் போல் காட்சியளிக்கிறது. ஆனால், உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப விலை கிடைக்காதது உற்பத்தியாளர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. தூத்துக்குடியில் தற்போது தரமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் தர உப்பு ஒரு டன்னுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரையிலும், இரண்டாம் தர உப்பு ரூ.800 முதல் ரூ.1,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் சந்தைகளில் குஜராத் உப்பு அதிகளவில் விற்பனைக்கு வருவதால், தூத்துக்குடி உப்பு தனது சந்தைப் பங்கை இழந்துள்ளது. இதனால் விற்பனையும் மந்தமாகி, உப்பளத் தொழில் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 80 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். உற்பத்திக்கு தொடர்ந்து சாதகமான சூழல் நிலவினால், இந்த ஆண்டு முழுமையான 100 சதவீத உற்பத்தியை எட்டுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். மேலும், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பில் ஒரு பகுதி இன்னும் விற்பனையாகாமல் இருப்பதாகவும், தற்போது விற்பனை வாய்ப்புகளும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தூத்துக்குடி வியாபாரிகள் ஏற்கனவே சந்தையை இழந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து நேரடியாக அந்த மாநிலங்களுக்கு உப்பு விற்பனைக்கு வருகிறது. இதன் விளைவாக உப்பின் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், தற்போதைய நிலை நீடித்தால் உப்புத் தொழில் மேலும் நலிவடையும் அபாயம் இருப்பதாகவும் உற்பத்தியாளர் தெரிவித்தார். எனவே, உப்பளத் தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.