மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழக அரசியல் நிலவரம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறும் வகையில் அவை செயல்பட வேண்டும் என்றார். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களில் கூட்டத்தைக் காட்டுவதற்காக மகளிர் சுய உதவிக் குழுவினரைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். இனிவரும் காலங்களில் இக்குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செயல்படும் என்றும், தவறான பயன்பாடு இருந்தால் அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் இணைந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சிகளுக்குள் எதிர்ப்புகள் எழுந்தால் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறினார். மேலும், திமுக மற்றும் அதிமுகவிடம் அதிகளவில் பணம் இருப்பதால், அதிகாரப் பதவிகளைப் பெறுவதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என விமர்சித்தார். முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசு பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Advertisement
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிடுவதாகவும் கூறினார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.70 கோடி வரை பணம் வழங்க முன்வந்தவர்கள் தற்போது சிக்கி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நீண்டகாலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற முயற்சிகளை மறைத்துவிட்டு, விரைவில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்றும் மூன்று மாதங்களில் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும் சிலர் கூறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அது ஒருபோதும் சாத்தியமாகாது என்றார். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு கட்சி மாற மாட்டார்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், ஒரு பாட்டிலுக்கு ரூ.1.50 முதல் ரூ.10 வரை அதிகமாகப் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.