எண்ணூர்-மாமல்லபுரம் சாலை திட்டத்துக்கான நிலம் எடுப்பு பணிகள் தீவிரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுடன், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களாலும் சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. தொலைவுக்கு சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.17,958 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.இதன் முதல்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையிலான 26.10 கி.மீ. நீளப்பகுதிக்கான பணிகளில் ஒரு தொகுப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை பகுதியில் உள்ள குறிப்பிட்ட நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் நில உரிமையாளர்கள், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கிளை அலுவலக வளாகத்தில் 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.எண்ணூர்-மாமல்லபுரம் சாலை திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்துக்கு தேவையான பல்வேறு உதவிகள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, சாலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும் நோக்கில், பெரும்பாலான சாலைகள் உலகத் தரத்தில் 6 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.