எச்-1பி விசா நீட்டிப்புக்கு ரூ.3.80 லட்சம் கட்டணம்: அமெரிக்கா அதிரடி
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான விசா விதிமுறைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கும் புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் எச்-1பி அல்லது எல்-1 விசா வைத்திருப்பவர்களாக இருந்தால், அவர்களின் விசா நீட்டிப்புக்கு இந்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.இதன்படி, எச்-1பி விசா நீட்டிப்புக்கு 4,000 அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ரூ.3.80 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்-1 விசாவுக்கு 4,500 டாலர்கள், சுமார் ரூ.4.28 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதுவரை எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களுக்கு ஆரம்ப கட்ட விண்ணப்பத்தின்போதோ அல்லது ஊழியர் புதிய பணிக்கு மாறும்போதோ மட்டுமே இந்த வகையான கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
தற்போது விசா காலத்தை நீட்டிப்பதற்கும் கட்டணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே செலுத்த வேண்டும்.
ஒரு ஊழியருக்காக வழக்கமான விசா நீட்டிப்பு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் நிறுவனங்களுக்கும் இனி இந்தக் கட்டணம் பொருந்தும். அதிக அளவிலான தொகையை செலுத்தி வெளிநாட்டு ஊழியர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க அமெரிக்க நிறுவனங்கள் முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.