கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே டியூஷனுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்ற 12 வயது சிறுவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அருகே சஞ்சய் (12) என்ற சிறுவன் டியூஷனுக்குச் செல்வதற்காக பைக்கில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குத் திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும், சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
அவர் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் (சிசிடிவி) பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுவன் யாருடன் சென்றார், பின்னர் எங்கு சென்றார், அவர் மாயமானதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காணாமல் போனாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. டியூஷனுக்குச் சென்ற 12 வயது சிறுவன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அவரது பெற்றோரிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.