உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை வெற்றி
டெல்லியில் நடைபெற்று வரும் 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை உன்னதி ஹூடா, மியான்மரின் தெட் ஹிதர் துஜாரை எதிர்கொண்டார். இதில் உன்னதி 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2-வது சுற்றுக்கு முன்னேறிய அவர், அடுத்த ஆட்டத்தில் கனடாவின் மிட்செல் லீயை சந்திக்கிறார்.பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி சிறப்பாக விளையாடியது.
2-வது சுற்றில் அமெரிக்காவின் லாரென் லாம்-அலிசன் லீ இணையை 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்திய ஜோடி, 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.இதற்கிடையே, கவிபிரியா செல்வம்-சிம்ரன் சிங் ஜோடி, கலப்பு இரட்டையரில் அஷித் சூர்யா-அம்ருதா இணை மற்றும் கேத் ருத்விகா-ரோகன் கபூர் ஜோடி ஆகிய இந்திய அணிகள் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறின.