ஈரானில் அடுத்த இலக்கு என்ன? டிரம்ப் எச்சரிக்கையால் பதற்றம் தீவிரம்
அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது: "தற்போது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஏற்பட்டுள்ள சேதங்களில் இருந்து ஈரான் முழுமையாக மீள 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம். எங்களின் நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது பின்வாங்கும் எண்ணமும் இல்லை" என்றார்.மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் ராணுவ திறனைக் குறைக்கும் நோக்கில், அதன் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.அதோடு, நதான்ஸ் அணு மையத்திற்கு அருகே மலைக்கடியில் அமைந்துள்ள "பிக்ஆக்ஸ் மலை" ரகசிய நிலத்தடி அணுசக்தி வளாகம் அடுத்த தாக்குதல் இலக்காக இருக்கக்கூடும் என்றும், அந்தப் பகுதி மீது விரைவில் கடுமையான தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
பொதுவாக தாக்குதல் இலக்குகளை முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்றாலும், இதைத் தடுக்க ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.டிரம்பின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த ஈரான் ராணுவ தலைமையகம், நிலத்தடி அணுசக்தி வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது போரின் விரிவாக்கமாகக் கருதப்படும் என்றும், அதற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையில், பஹ்ரைன் நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்து அழித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து சைரன் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.அதேபோல், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளும் ஈரானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன. மேலும், டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.