நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளவில் ரூ.710 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிரடி காட்சிகளும், முன்னணி நட்சத்திரங்களின் சிறப்புத் தோற்றங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், படம் வெளியான நாள் முதலே வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் வெளியான 11-வது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவில் இப்படம் ரூ.25.70 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை ரூ.24.15 கோடி வசூலாகியிருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் ஞாயிற்றுக்கிழமை வசூல் 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
Advertisement
இதன் மூலம் இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் ரூ.398.70 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகள் என மொத்தமாகக் கணக்கிடும்போது, உள்நாட்டு வசூல் ரூ.466.85 கோடியாகவும், வெளிநாட்டு வசூல் ரூ.243.50 கோடியாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.710.35 கோடியாகஉயர்ந்துள்ளது. இரண்டாவது வார இறுதி நாட்களில் மட்டும் இந்தியாவில் ரூ.64.35 கோடி நிகர வசூல் கிடைத்துள்ளதாகத் திரைத்துறை வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் ரூ.710 கோடி வசூல் என்ற மைல்கல்லைக் கடந்துள்ள ‘ஜெயிலர் 2’, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது. இந்தியாவில் ரூ.400 கோடி நிகர வசூலை நெருங்கி வரும் இப்படம், அடுத்தடுத்த நாட்களிலும் இதே வேகத்தில் வசூலைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.