தொழிலதிபர் ‘ஜெம்’ கிரானைட் வீரமணி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே புகார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உரிய விசாரணை நடத்தப்படாமல் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சித்குமாரும் செய்தியாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் தென்சென்னை கூடுதல் காவல் ஆணையராக இருந்த டாக்டர் கண்ணன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி. அருண் மற்றும் ஐ.ஜி. டாக்டர் கண்ணன் ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. இதையடுத்து, இருவரும் நேரில் ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்று, கடந்த 12-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரிகள் முன்பு இருவரும் ஆஜராகினர்.
Advertisement
அப்போது, அவர்களிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், ஒவ்வொருவரிடமும் தலா 80 கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் அளித்த பதில்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை தமிழகக் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி அருண் மீதான புகார் குறித்து விரைவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைப்பதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி அருண், ரூ.24 கோடி மதிப்பிலான தங்கத்தை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சொத்துகள் கைமாறியது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.