இந்திய பாரா விளையாட்டுத் துறையில் முக்கிய வீரராகத் திகழ்ந்த நீரஜ் யாதவ் உயிரிழந்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அவரது மறைவு விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ், சிறு வயதிலேயே போலியோவுக்குப் பிந்தைய உடல் பாதிப்பை எதிர்கொண்டார். எனினும், அந்தச் சூழலையும் கடந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். 2005 முதல் 2012-ஆம் ஆண்டு வரை சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் விளையாடிய அவர், பின்னர் பாரா தடகளத்தில் தனது கவனத்தைத் திருப்பினார். 2015-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். 2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் அவரது விளையாட்டு வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தன. ஆண்களுக்கான எப்55 ஈட்டி எறிதல் பிரிவில் 29.84 மீட்டர் தூரம் எறிந்த நீரஜ் யாதவ் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றதுடன், ஆசிய சாதனையையும் படைத்தார்.
Advertisement
இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டெறிதல் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவர் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்நிலையில், ஊக்கமருந்து தொடர்பான சர்ச்சை அவரது விளையாட்டுப் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. 2023-ஆம் ஆண்டு பெங்களூருவில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற பொருள் இருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அவரைப் போட்டிகளில் பங்கேற்கத் தற்காலிகமாகத் தடை செய்தது. இந்தத் தடையின் காரணமாக, 2026-ஆம் ஆண்டு ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் யாதவால் பங்கேற்க முடியவில்லை. தற்போது அவரது மறைவு இந்திய பாரா விளையாட்டுத் துறையினரிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு உள்ளிட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், மரணம் தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.