இந்தியாவுக்கு புதிய சுங்கவரி அறிவித்த அமெரிக்கா; 10% கூடுதல் வரி அமல்
கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை போதுமான அளவில் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் குறைந்தது 60 வர்த்தக கூட்டாளி நாடுகளுக்கு புதிய கூடுதல் சுங்கவரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின்படி, சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும். வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் சார்பை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவின்படி, கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களைத் தடுக்க தனிப்பட்ட சட்டங்கள் இல்லாத சீனா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீத சுங்கவரி விதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற சட்டங்கள் இருந்தாலும் அவற்றை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று கருதப்படும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அமெரிக்கா–மெக்சிகோ–கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற சில அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களுக்கு இந்த புதிய சுங்கவரி பொருந்தாது என்றும் விளக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சுங்கவரி உத்தரவு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், 2025 ஏப்ரலில் டிரம்ப் அறிவித்திருந்த "விடுதலை நாள்" சுங்கவரி நடவடிக்கைகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இடைக்காலமாக அமலில் இருந்த 10 சதவீத இறக்குமதி வரி வெள்ளிக்கிழமையுடன் காலாவதியானது. அதற்கு மாற்றாகவே இந்த புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிக்கு எதிரான தடைச் சட்டம் அமெரிக்காவில் நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதாகவும், அதை அந்நாடு கடுமையாக அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.