விமானத்தில் சக விமானியால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையிலும், பயணிகளின் உயிரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமக்கள் வீர விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிட்டுள்ளார். கேப்டன் ஸ்மித் மச்சார் உடல்நலம் முழுமையாகத் தேறிய பின்னர், அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஐசக் ஹெர்சாக், ஸ்மித் மச்சாரின் துணிச்சலும் தொழில்முறை திறனும் மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் குணமடைந்ததும், இஸ்ரேல் மக்களின் சார்பில் குடிமக்கள் வீரத்திற்கான அதிபர் விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
Advertisement
விமானக் கடத்தல் முயற்சியின்போது, ஓமனைச் சேர்ந்த துணை விமானியால் கத்தியால் தாக்கப்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார் பலத்த காயமடைந்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்திலும் அவரைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது