இடைத்தேர்தல் எதிரொலி.. மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (9-ந்தேதி) தொடங்கியுள்ளது. அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையே, இரு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதிக்கான திமுக வேட்பாளர் பரந்தாமன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் ஆளும் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், திமுக முதற்கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.