தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (9-ந்தேதி) தொடங்கியுள்ளது. அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையே, இரு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதிக்கான திமுக வேட்பாளர் பரந்தாமன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் ஆளும் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், திமுக முதற்கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் தமிழகத்தின் முக்கிய 3 கட்சிகளும் களமிறங்குவது உறுதியாகியுள்ளதால், தேர்தல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் அமுலு பொன்மலர், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், தவெக சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,194 ஆகும். திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளையும் பெற்றனர்.தற்போது மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 9 பறக்கும்படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளும், வாகன சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் நபர்கள், அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்த விதிமுறையும் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.