திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் பயிலும் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க. ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் மீது கோவில் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பேசியதும், மதுரையில் பேசியதும் வெவ்வேறு என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அடிப்படை விஷயங்களைக்கூட புரிந்துகொள்ளாமல் அவர் பேசுவதாக அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார். ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடலாம்; அதை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாது என்றும், திருவண்ணாமலையில் நடைபெற்றது பொது தரிசனம் என்றும், மதுரையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் என்றும் அவர் தெரிவித்தார். மதுரை கும்பாபிஷேகத்தின்போது பல்வேறு பணிகள் இருந்ததால், ஏற்பாடுகளை கவனிப்பதற்காக விஐபி தரிசனப் பாதை வழியாக சென்றதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
Advertisement
சாதாரண நாட்களில் விஐபி தரிசனப் பாதையில் செல்வதைப் பற்றிய விவகாரத்தை, கும்பாபிஷேக நாளில் அந்தப் பாதையை பயன்படுத்தியதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்றும் கூறினார். மேலும், கும்பாபிஷேக விழாவில் சிலரை ஒரு எம்.எல்.ஏ. அழைத்துச் சென்றது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சட்டப்பேரவை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் கடந்த மூன்று மாதங்களாக சட்டப்பேரவையில் பாடல் பாடுகிறார்கள், பாடல் பாடுகிறார்கள் என தொடர்ந்து கூறி வருவதாக விமர்சித்தார். சட்டப்பேரவைக்கு வந்து அவையில் நடைபெறும் விவாதங்களை கவனித்தால் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ. என்பது தெரியும் என்றும், ஆனால் அவைக்கு வராமல் இருப்பதால் அவர்களுக்கு அது தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின், திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனக்கு எழுதிக் கொடுக்கப்படும் வசனங்களைப் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.