சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 2-வது நாளாக இன்றும் தடை விதித்துள்ளனர். ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அருவியில் சீரான நீர்வரத்து காணப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து நீராடி மகிழ்ந்தனர். இந்நிலையில், கல்வராயன் மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Advertisement
இதனால், செந்நிறத்தில் அதிக அளவிலான தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.