அரசுப் பேருந்தில் மாணவர்களின் ஆபத்தான பயணம்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த சில பள்ளி மாணவர்கள், பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டும் பயணம் செய்துள்ளனர். ஒருவருக்கொருவர் போட்டியிடுவது போல் பேருந்தின் வெளிப்புறத்தில் ஆபத்தான வகையில் மாணவர்கள் செயல்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த காட்சிகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில், அவர்களின் செயல்பாட்டை பார்த்த சக பயணிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கிராமப்புறங்களில் பள்ளி, கல்லூரி நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், இதுபோன்ற ஆபத்தான பயணங்களுக்கும் வழிவகுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும், பள்ளி நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.