முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோதனை நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி என்றும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் மின்வெட்டை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்களின் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின்போது அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க.
Advertisement
நிர்வாகி அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்டவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை மாற்றுவதற்காகவே அன்பில் மகேஸ் மீது சோதனை நடத்தப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், எதிர்க்கட்சியினர் மீது சோதனை நடத்துவதன் மூலம் மக்களின் அதிருப்தியை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிலைக்காது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதனிடையே, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடரும் நிலையில், அன்பில் மகேஸுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.