ரெயில்வே மேம்பால பணிகள்: செங்கோட்டை செல்லும் ரெயில்கள் ரத்து
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் நடைபெற உள்ள ரெயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாக, தென்காசி–செங்கோட்டை இடையே சில பயணிகள் ரெயில்கள் 3 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையின் குறுக்கே தென்காசி–செங்கோட்டை ரெயில் பாதை அமைந்துள்ளது. இங்கு ரெயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தமிழக அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கின.இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பிலான பாலப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், ரெயில் தண்டவாளத்தின் மேற்பகுதியில் பாலத்தை இணைக்கும் பணி மட்டும் நிலுவையில் இருந்தது.இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் இரும்பு கிர்டர்களை கொண்டு வந்து, பாலத்தின் அருகே வரிசையாக அமைத்துள்ளது. தனித்தனியாக இருந்த கிர்டர்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தி இணைக்கும் பணியும், பின்னர் கான்கிரீட் அமைக்கும் பணியும் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்தப் பணிகள் 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளன.இதையொட்டி, தென்காசி–செங்கோட்டை இடையே சில ரெயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் 56776 செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில்**, செங்கோட்டை–தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தென்காசியில் இருந்து புறப்படும்.
* நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் 56773 நெல்லை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில், தென்காசி–செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
* மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் 56771 செங்கோட்டை பாசஞ்சர் ரெயில், தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
*செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் 56772 மதுரை பாசஞ்சர் ரெயில், செங்கோட்டை–தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தென்காசியில் இருந்து வழக்கம்போல் மதியம் 12.33 மணிக்கு மதுரைக்கு புறப்படும்.
இந்த மாற்றங்கள் தொடர்பான தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.