மணிப்பூரில் மர்மநபர்கள் திடீர் தாக்குதல்: பள்ளி முதல்வர் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக இடையிடையே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி முதல்வர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகுய் ஆஷாங் மற்றும் தனம்பா நாகா கிராமங்களுக்கு இடையே நேற்று முன்தினம் காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த சிலர் வாகனத்தை வழிமறித்து திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், வழியில் ஏற்பட்ட தடையால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து, நேற்று காலை பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.விசாரணையில், உயிரிழந்தவர்கள் சாவாங்சினிங் கிராம நிர்வாகத் தலைவர் விஸோபவ் சாரெனாமை, தனியார் பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வர் தட்ஸோங்பவ் ரிங்கள்மாய் மற்றும் மேலும் இருவர் என தெரியவந்தது. உயிரிழந்த 4 பேரும் லியாங்மாய் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு குக்கி தேசிய முன்னணி (பி) மற்றும் குக்கி புரட்சிகர ராணுவம் ஆகிய அமைப்புகளே காரணம் என ஐக்கிய நாகா கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.