பதிவை புதுப்பிக்காத ‘எம் சாண்ட்’ ஆலைகள் மீது விரைவில் நடவடிக்கை; தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கனிமவளத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. துறையின் அமைச்சர் பிரபு பல்வேறு மாவட்டங்களில் திடீர் ஆய்வுகளை நடத்தி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், முறைகேடுகளுடன் தொடர்புடைய கனிமவளத் துறை அதிகாரிகளை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கருங்கல் குவாரிகள் மீதான கண்காணிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து, எம் சாண்ட் உற்பத்தியாளர்கள் அதன் விலையை உயர்த்தியிருந்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி எச்சரிக்கை விடுத்ததால், விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது. அதேசமயம், எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கல் துகள்களை சுத்திகரித்து தயாரிக்கப்படும் எம் சாண்டை கட்டுமானப் பணிகளில் பயன்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து ஆலைகளும் பொதுப்பணித் துறையில் பதிவு செய்ய வேண்டும்.
அந்தப் பதிவு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் தற்போது 506 எம் சாண்ட் ஆலைகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சுமார் 40 சதவீதம், அதாவது 200 ஆலைகள் தங்களது பதிவை காலாவதியான பிறகும் புதுப்பிக்காமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக, பல ஆலைகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு புதுப்பிக்காமல் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதிவு செல்லுபடியாக இல்லாத நிலையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எம் சாண்டின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் பதிவு புதுப்பிக்காத நிறுவனங்கள் மீது எவ்வகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கனிமவளத் துறை ஆய்வுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பதிவு புதுப்பிக்காமல் எம் சாண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.