நிலவில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்: இஸ்ரோ ஆய்வில் வெளியான புதிய தகவல்
நிலவு முழுமையாக அமைதியான துணைக்கோள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், இதுவரை நிலவில் சுமார் 250 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான அதிர்வுகள் சிறிய அளவிலானவையாக இருந்தாலும், சில பல மணி நேரம் நீடித்ததாக இஸ்ரோ ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2023 ஜூன் 14 அன்று சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியை நோக்கி அனுப்பியது. பின்னர், 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்ட இடத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்த 'பிரக்யான்' ரோவர், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து பல முக்கிய தகவல்களை பூமிக்கு அனுப்பியது.இந்த ஆய்வின் மூலம், நிலவின் மேற்பரப்பு வெப்பத்தை எளிதில் கடத்தாத தன்மை கொண்டது என்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், சுமார் 10 செ.மீ. ஆழம் வரை உள்ள மண் வெப்பக் கவசம் போல செயல்படுவதுடன், அதற்கு கீழுள்ள அடுக்குகளில் மெக்னீசியம் தாதுக்கள் அதிகமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நிலவு உருவான ஆரம்ப காலத்தில் மெக்னீசியம் திரவ பிளாஸ்மா நிலையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.குறிப்பாக, 'சிவசக்தி' பகுதியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியிருப்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.