திருவள்ளூர் அருகே பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூர கொலை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வயல்வெளியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருந்தது.பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டாரெட்டி கிராமத்தில் வெள்ளக்குளம் அருகே வயல்வெளிப் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரியவந்தது.அருணா, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.அருணாவின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது முகம் முழுவதும் கருமையாக எரிந்தது போன்று காணப்பட்டது.
அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன.இந்த கொலையை செய்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் ஒன்றை போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊத்துக்கோட்டை அருகே பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற ஒருவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அதேபோல், கடம்பத்தூர் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் நடனமாடியது தொடர்பான தகராறில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில், ஊத்துக்கோட்டை அருகே பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.