ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. பேச்சு: முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிமுக
ஜல்லிக்கட்டு குறித்து சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசியதற்கு முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக அதிமுக தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ. கருப்பையா சட்டமன்றத்தில் அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் தனது தொகுதிக்குள் இருக்கும் நிலையில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.சங்க காலம் முதலே தமிழர்களுக்கும் காளைகளுக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் “ஏறு தழுவுதல்” குறித்த புரிதல் இல்லாமல் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பாரா எனவும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்ற உரிமை ஜல்லிக்கட்டு என குறிப்பிட்டுள்ள அக்கட்சி, அதனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறப்படும் எம்.எல்.ஏ.வின் பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதைய அரசு செயல்படுகிறதா என்றும், அதற்கான முன்னோட்டமாக தனது எம்.எல்.ஏ.
மூலம் இத்தகைய கருத்து தெரிவிக்கப்பட்டதா என்றும் தமிழக மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.எனவே, தனது கட்சி எம்.எல்.ஏ. பேசிய கருத்துக்காக முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.