கோவை அருகே பயங்கரம்: முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி திமுக பிரமுகர் குத்திக்கொலை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, திமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் முகத்தில் மிளகாய்ப்பொடி வீசப்பட்டு, ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர், திமுக பிரமுகராகவும் இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (65) என்பவரும் திமுக பிரமுகர். இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.இந்த நிலையில், நாகராஜுக்கும் தனது மனைவிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.நேற்று காலை டீ வாங்குவதற்காக நாகராஜ் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். நரசீபுரம் தெற்கு ரத வீதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, கந்தசாமி திடீரென அவரை வழிமறித்தார். நாகராஜ் பைக்கை நிறுத்துவதற்குள், அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசியுள்ளார்.மிளகாய்ப்பொடி கண்களில் பட்டதால் நிலைகுலைந்த நாகராஜ் தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியை எடுத்த கந்தசாமி, நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நாகராஜின் கழுத்து, தலையின் பின்பகுதி, வயிறு உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலைக்குப் பிறகு கந்தசாமி அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆலாந்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கந்தசாமியை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் இருந்த கந்தசாமி, தனது வலது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.