கைவிரல் ரேகை பதிவு: தமிழகம் முழுவதும் 29-ந் தேதி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில், மின்னணு ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது.மீதமுள்ள பணியையும் முழுமையாக முடிக்கும் நோக்கில், வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.இதுவரை ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.