கேரளம் மாநிலத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை... அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்ற மக்கள்
கேரளத்தின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஓணம், ஜாதி, மத வேறுபாடின்றி மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் (தமிழ் மாதம் ஆவணி) அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்தப் பண்டிகை நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஓணம் கடந்த 17-ந் தேதி தொடங்கிய நிலையில், 10-வது நாளான இன்று (26.8.2026) திருவோணம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகை தொடர்பாக பல்வேறு புராணக் கதைகள் கூறப்பட்டாலும், மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறே முக்கியமாகக் கருதப்படுகிறது. திருவோணம் நாளில் மகாபலி மன்னர் தான் ஆட்சி செய்த நாட்டிற்கு வருவதாகவும், அவரை வரவேற்கும் வகையிலேயே ஓணம் கொண்டாடப்படுவதாகவும் நம்பப்படுகிறது.இதையொட்டி, கேரள அரசு கடந்த 24-ந் தேதி முதல் ஓணம் வார விழாவை நடத்தி வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய படகுப் போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு நாளாக இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரளத்தில் மட்டுமின்றி, தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் விழா உற்சாகமாக நடைபெறுகிறது. இதேபோல், உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மக்களும் ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.திருவோணம் நாளான இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். பாரம்பரியமான கசவு எனப்படும் வெண்ணிற ஆடைகளை அணிந்து, வீடுகளின் முன்பு பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலம் அமைத்து மகாபலியை வரவேற்றனர். பெண்கள் பாரம்பரியமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.அத்தப்பூ கோலங்களில் தும்பை, காசி, அரளி, தாமரை, மல்லிகை, கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரள வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். அவர்களின் வசதிக்காக தோவாளையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மலர் விற்பனை நடைபெற்றது.ஓணம் நாளில் வீடுகளில் சிறப்பு விருந்து தயாரிப்பதும் முக்கிய நிகழ்வாக உள்ளது. ‘ஓண சத்யா’ என்று அழைக்கப்படும் இந்த விருந்தில் அறுசுவைகளில் 64 வகையான உணவுகள் இடம்பெறுகின்றன. புத்தரிசி மாவில் தயாரிக்கப்படும் அடை, அவியல், அடை பிரதமன், சாதம், பருப்பு, நெய், சாம்பார், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி அல்லது இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய், பால் பாயாசம், அடை பாயாசம், சிறுபருப்பு பாயாசம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உணவுகளை கடவுளுக்கு படைத்து வழிபட்ட பின்னர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் வாழை இலையில் பரிமாறி ஓண விருந்தை ருசிப்பார்கள்.திருவோணம் நாளில் ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை குடும்பத்தினருடன் உண்டும், நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பரிமாறியும் மகிழ்கின்றனர்.ஓணம் பண்டிகை நாட்களில் வயதுக்கு ஏற்ப மக்கள் ஓண ஊஞ்சல், ஓணப்பந்து உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு கேளிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்தக் காட்சிகளை பார்த்த மகாபலி சக்கரவர்த்தி மனநிறைவுடன் மீண்டும் பாதாள உலகத்திற்குச் செல்வதாக ஐதீகம்.