‘கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சட்டமன்றம் நாகரிகமாக இருந்தது’ - தமிழிசை சவுந்தரராஜன்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அதன் விவாத மரபு குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நான் சிறுவயதில் எனது தந்தையுடன் சட்டமன்றத்துக்கு சென்று, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து அங்குள்ள நிகழ்வுகளை கவனித்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எனது தந்தை குமரி அனந்தன் உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கு நடைபெறும் விவாதங்களை பார்ப்பதற்கே ஆர்வமாக இருக்கும்.அந்த காலத்தில் சட்டமன்றம் நாகரிகமான முறையில் செயல்படும் சபையாகவும், நாகரிகமான தலைவர்கள் அமரும் இடமாகவும் இருப்பதாக தோன்றும்.தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இருப்பினும், சிலரின் செயல்பாடுகள் அவரே வெறுப்படையும் அளவுக்கு இருக்கின்றன.இன்றைய காலகட்டத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் அவற்றை கவனித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க விஷயம்.எனவே, தமிழக சட்டமன்றத்தில் முன்பு இருந்ததைப் போல நாகரிகமான விவாதங்கள் நடைபெற வேண்டும். சட்டமன்றத்தின் பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாக்க வேண்டும். அனைவரும் இணைந்து சட்டமன்றத்தை ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.