இந்தியாவில் முதல் முறையாக எல்பிஜி உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம்; மத்திய அரசின் புதிய நடவடிக்கை
எதிர்காலத்தில் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கும், வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கும் மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நாளொன்றுக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி செய்யும் இலக்கை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முதல் முறையாக நிர்ணயித்துள்ளது.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பிராந்திய மோதல்களால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.நாடு முழுவதும் உள்ள 21 பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த எல்பிஜி உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 63,810 டன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி, நாட்டின் தினசரி எரிவாயு தேவையில் சுமார் 70 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாயரா எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக உற்பத்தி இலக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும், உள்நாட்டு உற்பத்தி இலக்கு மற்றும் விநியோகத் திட்டம் ஆகியவை நுகர்வோர் தேவைக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு ஏற்படுவதைத் தடுக்க உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.