வைபவ் அதிரடி அரைசதம்; 15 வயதில் புதிய உலகச் சாதனை – ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதம் இந்திய அணிக்கு எளிய வெற்றியை பெற்றுத் தந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் அசோக் சர்மா அறிமுகமானார். ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரான் மற்றும் நியூமன் நியாம்ஹுரி முதல் முறையாக களமிறங்கினர்.
ஆரம்பத்திலேயே சரிந்த ஜிம்பாப்வேஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடங்கிய பென்னெட் மற்றும் பென் கர்ரான் ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 149 கி.மீ. வேகத்தில் முதல் பந்தை வீசிய மயங்க் யாதவ், பென்னெட்டை டக் அவுட்டாக்கினார். பின்னர் பிரின்ஸ் பந்தில் பென் கர்ரான் (10) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.மயங்க் யாதவ் தொடர்ந்து மையர்ஸையும் (6) வெளியேற்ற, கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்களில் துபே பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ரியான் பர்ல் 26 ரன்களில் பிஷ்னோயின் சுழற்பந்தில் வெளியேறினார். பின்னர் வெஸ்லே (39) மற்றும் மருமானி இணைந்து அணியை ஓரளவு மீட்டனர். இறுதியில் 20 ஓவர்களில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மருமானி 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணிக்காக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வைபவின் மின்னல் வேக இன்னிங்ஸ்
126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் அளித்தனர்.இரண்டாவது ஓவரிலேயே வைபவ் தனது தாக்குதலை தொடங்கினார். ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி, மீண்டும் ஒரு சிக்சர் என அதிரடியாக விளையாடி அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்த்தார்.மறுமுனையில் அபிஷேக் சர்மா 8 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து முசரபானியிடம் விக்கெட்டை இழந்தார். ஆனால் வைபவ் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து, ஈவன்ஸ் மற்றும் முசரபானி வீசிய ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகளும் சிக்சர்களும் விளாசினார்.இஷான் கிஷனும் அதிரடியாக ரன்கள் சேர்த்ததால், இந்தியா பவர் பிளே முடிவில் 66/1 என்ற வலுவான நிலையை எட்டியது.நிகரவா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த வைபவ், வெறும் 18 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.
அடுத்த பந்தில் 19 பந்துகளில் 50 ரன்கள் (4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் பென் கர்ரானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.வைபவ் வெளியேறிய பிறகு இஷான் கிஷனுடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார். இந்திய அணி 10.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.இஷான் கிஷன் 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இந்தியா 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுடனும், திலக் வர்மா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 15 வயதில் வரலாறு படைத்த வைபவ் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், 15 வயது 118 நாட்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரைசதம் விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதற்கு முன்பு 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிராக 15 வயது 340 நாட்களில் இந்த சாதனையை நேபாளத்தின் குஷால் மல்லா நிகழ்த்தியிருந்தார்.மேலும், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் வைபவ் கைப்பற்றினார். 2021-ஆம் ஆண்டு மால்டாவுக்கு எதிராக 16 வயது 56 நாட்களில் இந்த சாதனையை படைத்த ஜிப்ரால்டர் வீரர் லூயிஸ் புரூஸை அவர் பின்னுக்குத் தள்ளினார்.அதேபோல், ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் வைபவ் தனது பெயரில் பதிவு செய்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.