விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுவதாக அறிவித்தார்.அதன்படி, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.உலகம் முழுவதும் ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற எல்லா வேறுபாடுகளையும் தாண்டி மனிதர்களை இணைக்கும் தொழில் விவசாயம் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றொரு பகுதியில் வாழும் மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன என்றார். விவசாயத்தை மதித்து, விவசாயிகளுக்கு பாதுகாப்பும் ஆதரவும் வழங்கும் நாடுகளில்தான் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர் கூறினார்.தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதிச் சவால்களுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிட்ட முதல்-அமைச்சர், பதவியேற்ற 15 நாட்களுக்குள் கடந்த மே 25-ந் தேதி ரூ.50 ஆயிரம் வரையிலான கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்.அதன் பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டு, ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்ய கடந்த ஜூன் 19-ந் தேதி அரசு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.இந்தத் திட்டத்தின் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், கடந்த ஜூலை 31-ந் தேதி வரை ரூ.5,267 கோடி தொகை 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், பயிர்க்கடன் தள்ளுபடியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து முன்வைத்தன. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தக் கோரிக்கைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.முந்தைய காலங்களில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும், கூட்டுறவு வங்கிகளுக்கு அரசின் சார்பில் செலுத்த வேண்டிய தொகை பல ஆண்டுகளாக தவணை முறையில் வழங்கப்பட்டு வந்ததாகவும், 2021-ல் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி தொகை 2021 முதல் 2026 வரை 12 தவணைகளாக வழங்கப்பட்டதாகவும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 நவம்பர் 28-ந் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழிகாட்டுதலையும், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.
புதிய அறிவிப்பின்படி:
* ரூ.75 ஆயிரம் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
* ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
* ரூ.1 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
ஏற்கனவே வழங்கப்பட்ட தள்ளுபடிக்கு மேலாக, ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் சலுகை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.இந்த கூடுதல் தள்ளுபடி காரணமாக அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றாலும், விவசாயிகளின் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்ற அடிப்படையில், மொத்தம் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு வழங்குவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.