பெண்கள் கவனத்திற்கு.. வெற்றிப் பயண திட்டத்தில் அரசு பஸ்களில் எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்?
தமிழகத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காக ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சாதாரண நகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள த.வெ.க. அரசு, இந்தத் திட்டத்தின் பெயரை ‘வெற்றிப் பயணத் திட்டம்’ என மாற்றியுள்ளது. மேலும், சாதாரண நகர பஸ்கள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியான நாளை (அக்.2) இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது. எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்? எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற நிலையில், ஒரு பெண் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை அல்லது நாகர்கோவில் போன்ற தொலைதூர இடங்களுக்கு இலவசமாக செல்ல முடியுமா என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, தமிழகத்தில் அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் 30 முதல் 100 கி.மீ. வரையிலும், எல்.எஸ்.எஸ். பஸ்கள் 30 முதல் 40 கி.மீ. வரையிலும், டீலக்ஸ் பஸ்கள் 30 முதல் 50 கி.மீ. வரையிலும் இயக்கப்படுகின்றன. இதில் எக்ஸ்பிரஸ் பஸ்களே அதிக தூரம் இயக்கப்படுகின்றன.