மேட்டூர் அணையை திறந்து வைத்துவிட்டு சேலம் நோக்கி சென்ற முதல்-அமைச்சர் விஜய், சின்னக்காவூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீட்டிற்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். விஜய்யை வரவேற்பதற்காக சின்னக்காவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களிடம் பேசிய அவர், பின்னர் அருகிலிருந்த விவசாயியின் வீட்டிற்குச் சென்றார். முதல்-அமைச்சர் தங்கள் வீட்டிற்கு நேரில் வந்தது அந்தக் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விவசாய குடும்பத்தினரிடம் அவர்களின் விவசாயப் பணிகள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை விஜய் கேட்டறிந்தார். அதற்கு, வீட்டின் பின்புறத்தில் வாழை மரங்களை வளர்த்து வருவதாகவும், அதுவே தங்களின் முக்கிய வாழ்வாதாரம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், தங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் குறித்தும் விஜய் கேட்டுத் தெரிந்து கொண்டார்.பின்னர் விஜய்யை வழியனுப்புவதற்காக அந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் அவருடன் கைகோர்த்தபடி வந்தார்.
Advertisement
அப்போது அவரிடம் அன்புடன் விடைபெற்ற விஜய், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸை பாட்டிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.விஜய்யுடன் கைகோர்த்தபடி பாட்டி வந்ததைப் பார்த்த அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். பதிலுக்கு விஜய்யும் மக்களை நோக்கி கையசைத்தார். பின்னர், பாட்டியையும் மக்களை நோக்கி கையசைக்குமாறு அவர் கூறினார். இதையடுத்து பாட்டியும் விஜய்யுடன் இணைந்து மக்களை நோக்கி கையசைத்தார்.விஜய் அணிந்திருந்த கூலிங்கிளாஸை அணிந்த பாட்டிக்கு மகிழ்ச்சியுடன் கூடிய வெட்கமும் ஏற்பட்டது. அந்தக் கண்ணாடியை அணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனிடையே, பாட்டி அணிந்திருந்த விஜய்யின் கூலிங்கிளாஸை பார்த்த அப்பகுதி இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். அவர்கள் பாட்டியிடம் சென்று அந்தக் கண்ணாடியை அணிந்து பார்த்ததுடன், அதனை அணிந்தபடியே புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.விஜய் மற்றும் அந்தப் பாட்டி இடையே நடைபெற்ற இந்த அன்பான சந்திப்பு, சின்னக்காவூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.