விடாமுயற்சியால் உயர்ந்த அரசுப்பள்ளி மாணவி; சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இடம்பிடித்த 14 வயது ஜெஸ்ஸி
பெண்களின் அறிவியல் மற்றும் விண்வெளி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும் மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) என்ற உலகளாவிய திட்டத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது அரசுப்பள்ளி மாணவி கண்டூலா ஜெஸ்ஸி சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.சென்னையை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் செயல்படும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் சிறுமிகள் பங்கேற்ற நிலையில், கடுமையான தேர்வின் மூலம் 20 திறமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஜெஸ்ஸியும் ஒருவர்.ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம், தவளேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸியின் தந்தை தச்சராக பணியாற்றி வருகிறார்.
அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் அவர், தனது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.விண்கல அமைப்புகள் (Satellite Systems), உந்துவிசை (Propulsion), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) உள்ளிட்ட சவாலான விண்வெளி அறிவியல் தலைப்புகளில் நடத்தப்பட்ட 550 பயிற்சி வகுப்புகளையும் ஜெஸ்ஸி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.இதுகுறித்து ஜெஸ்ஸி கூறுகையில், “நான் தினமும் தவறாமல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றேன். கடினமாக உழைத்தால் இஸ்ரோவில் சேர வேண்டும் என்ற என் கனவை நிச்சயமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், என் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் இலக்கு,” என்றார்.