விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள ஈத்தங்காட்டைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன், தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ஆம் தேதி அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.அதன்பிறகு, கடந்த 13-ஆம் தேதி சிறையிலேயே சபரிவர்மன் உயிரிழந்தார். விசாரணையில், மூன்று சிறை வார்டன்கள் மற்றும் எட்டு விசாரணைக் கைதிகள் இணைந்து அவரது கை, கால்களை கட்டிவைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் எட்டு கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய எட்டு கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினர்.இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கைதிகளில் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், சம்பவம் நடைபெற்ற நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, சபரிவர்மன் உயிரிழந்த அறையிலிருந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர்.இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய தகவலாக, சபரிவர்மனின் செல்போன் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.