வேண்டும் வரம் அருளும் வரலட்சுமி விரதம்
செல்வ வளத்தை அருளும் மகாலட்சுமியை பக்தியுடன் வழிபடுவதற்கு சிறப்பான நாளாக கருதப்படுவது வரலட்சுமி விரத நாளாகும். ‘வரலட்சுமி விரதம்’ என்றும் ‘வரலட்சுமி நோன்பு’ என்றும் அழைக்கப்படும் இந்த விரதத்தை பெண்கள் பக்தி சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர். ‘வரலட்சுமி’ என்பதற்கு வரங்களை வழங்கும் லட்சுமி என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைப்பதுடன், ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி எனப்படும் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் குடும்பத்தின் செல்வ வளம் பெருக வேண்டி இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். மகாலட்சுமி வீடு தேடி வந்த கதை ஒருமுறை மகாலட்சுமி வயதான சுமங்கலி பெண்ணின் தோற்றத்தில் பூலோகத்திற்கு வந்து, எந்த வீட்டில் தங்கலாம் என்பதை அறிய வீடு வீடாகச் சென்றதாக கூறப்படுகிறது. முதலில் சென்ற வீட்டில், பொழுது விடிந்த பின்னரும் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அங்கிருந்து சென்ற அவர், அடுத்த வீட்டை அடைந்தபோது வீடு முழுவதும் சுத்தமின்றி குப்பையாக இருப்பதை பார்த்தார். மூன்றாவது வீட்டில் கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.இதனால் அங்கிருந்தும் புறப்பட்ட மகாலட்சுமி, அடுத்த வீட்டை அடைந்தார். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு, பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. வீடு முழுவதும் மங்களகரமான சூழல் நிலவியது.இதைக் கண்ட மகாலட்சுமி, அந்த வீட்டிற்குள் செல்ல விரும்பினார். அவரை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக வரவேற்று உபசரித்தனர். அவருக்கு உணவு வழங்குவதற்காக குடும்பத்தினர் உள்ளே சென்றுவிட்டு திரும்பியபோது, வயதான பெண்ணை காணவில்லை.பின்னர் பூஜையறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு செல்வம் நிறைந்து காணப்பட்டது. அப்போதுதான் வயதான சுமங்கலி பெண் வடிவில் தங்கள் வீட்டிற்கு வந்தது மகாலட்சுமியே என்பதை குடும்பத்தினர் உணர்ந்ததாக இந்தக் கதை கூறுகிறது. வீட்டை சுத்தம் செய்து வழிபாடுவரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமி பக்தர்களின் இல்லம் தேடி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.