ரூ50 லட்சம் மதிப்புள்ள 55 செம்மரக்கட்டைகள் மாயம்; திருப்பத்தூரில் போலீசார் தீவிர விசாரணை
திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு உட்பட்ட அரசு சந்தன மர விற்பனை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக்கட்டைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் வனச்சரகங்களில் செம்மர வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கட்டைகள் இந்த கிடங்கில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1,750 கிலோ எடை கொண்ட 55 செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 18-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்து இந்த செம்மரக்கட்டைகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட இருப்பு சரிபார்ப்பின்போது செம்மரக்கட்டைகள் காணாமல் போனது தெரியவந்தது.இதையடுத்து, திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கின் ஒற்றைப்பூட்டு அலுவலர் நா. ஜோதிலிங்கம், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம். மகேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருடப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை முடிவடைந்த பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு பாதுகாப்பில் இருந்த உயர்மதிப்புடைய செம்மரக்கட்டைகள் திருடப்பட்ட இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.