தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு, தவெக அரசுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனைச் சமாளிக்கும் வகையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 முதல் ரூ.37 வரை கொடுத்து அவசரமாகக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12-ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்புக்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், 2026 மே 23-ஆம் தேதி பதவியேற்ற தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்பிறகு, ஜூன் 25-ஆம் தேதி நீண்டகால ஒப்பந்தங்கள் வாயிலாகக் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதாக அளித்த வாக்குறுதியையும் நினைவுபடுத்தியுள்ளார். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 வரை கொடுத்து அவசரமாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெறப்பட்டிருந்த நிலையில், அந்த விலை நிர்ணயங்கள் என்ன ஆனது என்றும் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அக்டோபர் மாதத்துக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திர அரசு செப்டம்பர் 9-ஆம் தேதியே ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரையிலான விலையில் ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாமல், கடைசி நேரம் வரை காத்திருந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் முறையாகத் தயாராக இருந்தபோதிலும், நிலக்கரி இருப்பைப் பராமரிப்பதில் ஏற்பட்ட திட்டமிடல் குறைபாடு காரணமாக, அவை தற்போது குறைந்த திறனிலேயே இயங்குவதாக டி.ஆர்.பி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இந்த மின் நிலையங்களில் ஒரு யூனிட்டை சுமார் ரூ.5 செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், அதைவிட ஏழு மடங்கு அதிகமாக ரூ.35 முதல் ரூ.37 வரை செலவிட்டு மின்சாரம் வாங்குவது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். மின் உற்பத்தி மற்றும் இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லாததே தற்போதைய நிலைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒப்பந்தத்தின்படி, 20 நாட்களுக்கு முழுமையான அளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டால், ரூ.3,100 கோடிக்கும் அதிகமாகச் செலவாகும் எனத் தகவலறிந்தவர்கள் கூறுவதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வரிப்பணம் இவ்வளவு அதிகமாகச் செலவிடப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், மின் கட்டண விவரங்கள் மட்டுமின்றி, இத்தகைய முடிவுகளுக்கான முழுமையான செலவுக் கணக்கையும் தமிழக அரசு பொதுமக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.