ரூ.19 ஆயிரம் முதலீடு.. ரூ.40 கோடி வசூல்! ‘அப்செஷன்’ சாதனையை முறியடித்த ‘நியூ லாய்’
சீனாவில் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’ எதிர்பாராத வகையில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வெறும் ரூ.19 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Xin Yumeng மற்றும் Sun Lifang ஆகிய இருவரும் இணைந்து ‘நியூ லாய்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சீனாவில் இப்படம் வெளியானபோது, தொடக்கத்தில் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் 10 நாட்களில் 300-க்கும் குறைவானவர்களே படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.மேலும், படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் அனிமேஷன் மற்றும் குரல் பதிவுஉள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகின. சிலர் படத்தை மிகவும் மோசமானதாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகளைவிடவும் தரம் குறைந்ததாகவும் விமர்சித்தனர்.ஆனால், இந்த எதிர்மறையான விமர்சனங்களே ‘நியூ லாய்’ படத்திற்கு எதிர்பாராத விளம்பரமாக அமைந்தன.
திரைப்படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் மீம்களாக பகிரப்பட்டு வைரலானது. இதையடுத்து, “படம் உண்மையிலேயே இவ்வளவு மோசமாக இருக்கிறதா?” என்ற ஆர்வம் பலரிடமும் ஏற்பட்டது. இதனால் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக ‘நியூ லாய்’ படத்தின் வசூல் வேகமாக உயர்ந்தது. சீன பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, இதுவரை இப்படம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.19 ஆயிரம் மட்டுமே செலவில் உருவான படம் என்பதால், அதன் முதலீட்டை விட சுமார் 20,000 மடங்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளது.இதற்கு முன்பு மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, முதலீட்டுத் தொகையை விட 666 மடங்கு அதிகமாக வசூலித்த ‘அப்செஷன்’ திரைப்படம் சாதனை படைத்திருந்தது. தற்போது ‘நியூ லாய்’ சுமார் 20,000 மடங்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், குறைந்த முதலீட்டில் அதிக வசூல் என்ற சாதனையில் ‘அப்செஷன்’ படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.