ராஜஸ்தான்: நகைக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்த்த ஊழியர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் நகரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் பகல் நேரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் குழு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அருகிலுள்ள நகைக்கடைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது. அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை உடனடியாக இயக்கினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தைரியமாக செயல்பட்டு கொள்ளையர்களை எதிர்கொண்டு, அவர்களின் முயற்சியை முறியடிக்க முயன்றனர்.எதிர்பாராத எதிர்ப்பை சந்தித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.
நகைக்கடையின் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.