ரோகிணி திரையரங்கில் “ஜனநாயகன்” படம் பார்த்த நடிகை திரிஷா
நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இந்தப் படத்தை காண நடிகை திரிஷா தனது தோழிகளுடன் வந்தார். அவர் வருகை தந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களைத் தொடர்ந்து இன்று ரசிகர்கள் முன் வெளியிடப்பட்டது.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் நடித்த முதல் வெளியாகும் திரைப்படம் என்பதால், படத்தின் தொடக்க டைட்டிலில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்” என்ற குறிப்பிடுதல் இடம்பெற்றுள்ளது. மேலும், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்ததாகக் கூறப்படும் ஒரு சைகையும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.விஜய்யின் கடைசி திரைப்படமாக ‘ஜனநாயகன்’ கருதப்படுவதாலும், பல்வேறு தடைகளைத் தாண்டி படம் வெளியானதாலும், முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் திரையரங்குகளில் அதிக ஆர்வத்துடன் திரண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், சுமார் 11 மணியளவில் திரிஷா ரோகிணி திரையரங்குக்கு வந்தார். அவரை நேரில் கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்போது செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோதும், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் திரிஷா நேராக திரையரங்குக்குள் சென்றார்.விஜய் மற்றும் திரிஷா தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்க்க திரிஷா வந்திருப்பதும் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற தகவல் ரசிகர்களிடையே உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.