மேட்டூர் அணை 28-ம் தேதி திறக்கப்படுமா? விஜய் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, திட்டமிட்ட தேதியிலோ அல்லது தாமதமாகவோ பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், சுமார் 70 நாட்களாகியும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா பாசனத்துக்கு விரைவில் நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10,807 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வழக்கமான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாத ஆண்டுகளில், அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் பாசனத்துக்கு நீர் திறப்பது நடைமுறையாக உள்ளது. அந்த வகையில், இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, நேற்று காலை சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விரைவில் நல்ல தகவல் வெளியாகும் என தெரிவித்தார்.மேலும், நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனால், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய் வரும் 28-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளதாக நேற்று மாலை தகவல் வெளியானது. இதற்காக அவர் விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் மேட்டூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை அவர் திறந்து வைக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.