மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே அணை அமைக்க கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய நீர்வளத்துறையின் பதிலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும், 2018-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை திட்டத்துக்கு எந்த வகையிலும் சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.காவிரி என்பது வெறும் நீராதாரம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்றும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்பாசன மாநிலம் அணை கட்ட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை திரும்பப் பெற பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவும், நீர்வரத்தும் தொடர்ந்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தத் திட்டம் குறித்து முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுகள் முடிந்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் அவர்களின் ஒப்புதல் இன்றி செயல்படுத்த முடியாது என்றும், மேகதாது அணை திட்டத்துக்கு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதி வழங்காமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.