மேகதாது அணை விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையிலான காவிரி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக மழைப்பொழிவு குறையும் காலங்களில் இந்த விவகாரம் தீவிரமடைவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கர்நாடகத்தில் போதிய மழை இல்லாததால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இதனுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் முயற்சிகளை கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ள முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்து அதற்கான கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.அதன்படி, வருகிற 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் விஜய் பெங்களூரு செல்ல உள்ளார். அங்கு விதான சவுதா சட்டசபை வளாகத்தில் அமைந்துள்ள மாநாட்டு அரங்கில் டி.கே. சிவக்குமாரை சந்தித்து காவிரி நீர் மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சந்திப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.