‘முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் 100 நாள் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் முக்கிய திருப்புமுனை’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் மாறி மாறி இருந்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவான தமிழக வெற்றிக் கழகம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, கடந்த மே 10-ஆம் தேதி விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.
த.வெ.க. அரசு பதவியேற்று இன்று (திங்கட்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் 100 நாள் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாக அமைந்துள்ளதாக சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசியபோது, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள், சமூக நலத் திட்டங்கள், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான தரமான வீடுகள் அமைக்கும் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த அரசு மக்களுக்கான அரசாக தன்னை நிரூபித்துள்ளதாக கூறினார்.மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தும் இந்த ஆட்சியின் செயல்பாடுகள், தமிழ்நாட்டை வளமான மற்றும் வலிமையான மாநிலமாக மாற்றும் நீண்டகால இலக்குகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.