மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவில்: பல்லவர் கால சிறப்புமிக்க சிவத்தலம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் விளங்குகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரம் முக்கிய துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. அப்போது பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் முக்கிய இடம் வகித்த பரஞ்சோதி என்பவர் இந்த கோவிலை கட்டி, வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. கருங்கற்களால் உருவாக்கப்பட்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூன்று நிலை ராஜகோபுரம், கோவிலின் தனிச்சிறப்பாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடிமரம் மற்றும் நந்தி பகவானை தரிசிக்கலாம். ராஜகோபுரத்தின் அருகே கோவில் வளாகத்தில் இருபுறங்களிலும் சூரியன் மற்றும் சந்திரனுக்கான தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.கிழக்கு நோக்கிய கருவறையில் மல்லிகேஸ்வரர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ள தனி சன்னிதியில் மல்லிகேஸ்வரி அம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.கோவில் வளாகத்தில் நடராஜருக்கென தனி சன்னிதியும் உள்ளது. கருவறையின் வெளிப்புற சுவர்களில் அமைந்துள்ள கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. துர்க்கை சன்னிதிக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.திருச்சுற்றுப் பிரகாரத்தில் கமல விநாயகர் சன்னிதி உள்ளது.