ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றியவர் ஜாபர் சித்திக். இவரது மனைவி ஷோபனா, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தனது கணவர் தன்னைத் தாக்கியதாக வேலூர் போலீசில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரமக்குடிக்குச் சென்று ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, தமிழக உள்துறை செயலாளர் ஜாபர் சித்திக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Advertisement
இந்நிலையில், மனைவி அளித்த வன்கொடுமை புகார் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. ஜாபர் சித்திக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னைச் சித்ரவதை செய்து துன்புறுத்தியதாகவும் ஜாபர் சித்திக் மீது அவரது காதல் மனைவி தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.