மதுரையில் கனமழை; தரையிறங்குவதில் சிக்கல்... ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானம்!
மதுரையில் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மும்பையில் இருந்து வந்த இண்டிகோ பயணிகள் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், மாலை 3.45 மணியளவில் மதுரை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த நேரத்தில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. குறிப்பாக, ஆரப்பாளையம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணா நகர், தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், வில்லாபுரம், அவனியாபுரம், பெருங்குடி, பசுமலை, தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.