Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்

போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. இதையடுத்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணப் பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.சட்டசபை தொடங்கியதும் கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், அவர் போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.இந்த சம்பவத்தை சாதாரணமாகவோ, கோஷ்டி மோதலாகவோ பார்க்க முடியாது என்றும், அரசின் அலட்சியமும் காவல்துறையின் பொறுப்பற்ற செயல்பாடும் கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். மேலும், எண்ணூர் ஆற்றில் ஏராளமான மீன்கள் இறந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பிரச்சினையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.அ.தி.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் பேசுகையில், 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் அமுதன் உயிரிழந்ததாகவும், இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார், கோவை மாணவர் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை என்று தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனை அளிப்பதாகவும் கூறினார்.பள்ளி மாணவர்களுக்கே போதைப்பொருட்கள் எளிதில் கிடைக்கும் நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த ஆட்சியில் எந்த காரணங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ, அதேபோல் தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதாக கூறினார்.அமுதன் மற்றும் தனுஷ் கொலை வழக்குகளில் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கணேஷ்குமார் வலியுறுத்தினார்.சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி பேசுகையில், கோவையில் கடந்த 10 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த காவல்துறையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மாணவர் அமுதன் கொலை வழக்கு போதைப்பொருள் புகார் தொடர்பானது அல்ல என்று தெரிவித்தார். உண்மை நிலவரத்தை மாற்றும் வகையில் இந்த வழக்கை திசைதிருப்ப வேண்டாம் என்றும் கூறினார்.மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே கொலைக்கு காரணம் என்றும், எதிர்க்கட்சிகள் கூறியதைப் போன்று சம்பவம் நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கினார். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ, காவல்துறைக்கோ இல்லை என்றும் அமைச்சர் கூறினார். போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டார் என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், அமுதன் கொலை வழக்கில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசின் பார்வையில் தங்களது குழந்தைகள் போன்றவர்கள் என்று தெரிவித்தார். மாணவர் கொலை சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், கோவை மாணவர் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் கூறினார்.கல்வி நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்குடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்ததாக கூறினார். அதேநேரத்தில், தங்களது அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும் என்றும், அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் பதிலளிக்கையில், மைதானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதாக கூறினார். அந்த சம்பவம் நடைபெற்றது தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் என்றும், அப்போது மைதானத்தில் போதைப்பொருளை அனுமதித்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.தனக்கு எதிராக கூறப்படும் புகார் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், அந்த ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்றதை ஒப்புக்கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதனால், தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் தொடக்க நாளிலேயே போதைப்பொருள் புழக்கம், கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு